பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த அவர், பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
94 வயதான சௌகார் ஜானகிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1950-ல் தொடங்கிய திரைப்பயணம்
ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் 1931-ஆம் ஆண்டு பிறந்த சௌகார் ஜானகி, இளம் வயதிலேயே வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களில் பங்கேற்றார்.
1950-ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘ஷவுகாரு’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரது பெயருடன் ‘சௌகார்’ என்ற பெயரும் இணைந்தது.
1952-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘வளையாபதி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
400-க்கும் மேற்பட்ட படங்கள்
சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2020-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களைத் தாண்டி மேடை நாடகங்களிலும் அவர் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்
திரைத்துறையில் நீண்டகாலமாக ஆற்றிய பங்களிப்புக்காக சௌகார் ஜானகிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் அவற்றில் ஒன்றாகும். அவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
பல தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்த சௌகார் ஜானகியின் மறைவு, தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
