டெல்லியின் திலக் நகரில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை மந்திரி பர்வேஷ் வர்மா அங்கு வந்து பார்வையிட்டார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஷகிப் சிங் என்ற இளைஞர் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா இளைஞர் ஷகிப் சிங்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிப் சிங் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அமைச்சரின் உதவியாளர்கள் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திலக் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் சௌரப் பரத்வாஜ் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சௌரப் பரத்வாஜ் மற்றும் கட்சித் தொண்டர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

