முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய 19 இடங்களில் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. மேலும், திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என். நேருவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என். நேரு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளில் டெண்டர் முறைகேடு தொடர்பான விவகாரங்களும் இந்த சோதனையுடன் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய இடங்களில் இதற்கு முன்பும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்தியிருந்தனர். தற்போது அதே பின்னணியில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள கே.என். நேருவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial