மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில் நிலவும் புகைமூட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு மோசமடைந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. சாலைகளில் பயணம் செய்வதிலும், வெளிப்புற நடவடிக்கைகளிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
செப்டம்பர் 22 மற்றும் அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் சரியாக செய்யப்படவில்லை என நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
காற்று மாசுபாடு அதிகரித்தால் என்ன நடக்கும்?
நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால், வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, குப்பைகளை எரிப்பதால் உருவாகும் புகை மற்றும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காரணமாக காற்றில் மாசு அதிகரிக்கும். இதனை சுவாசிக்கும்போது பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
காற்றில் கலந்திருக்கும் மிக நுண்ணிய தூசித் துகள்களில் சில நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குச் செல்லக்கூடும். குறிப்பாக, 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவுடைய நுண்துகள்கள் உடல்நலத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் தொண்டை எரிச்சல், இருமல், தும்மல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஏற்கெனவே சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

