சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் நவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டது.
சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கடலோர ஒழுங்குமுறை விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகள் தொடர்பாக உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திட்டத்தை கைவிடவும், வழக்கு முடியும் வரை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

