கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்புத் தணிக்கையில், சுமார் ரூ.2,277 கோடிக்கு நிதி தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் ரூ.2,277.27 கோடி அளவுக்கு நிதி முரண்பாடுகள் இருப்பதாக தணிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக சொத்து வரி நிர்வாகத்தில்தான் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கும் சொத்து வரி வசூலில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. சொத்து வரி விவரங்களை முறையாக UTIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் மட்டும் சுமார் ரூ.1,194 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு குப்பை வாகனங்களின் எடையைக் கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட இரண்டு எடை மேடைகளுக்கான செலவினங்களில் அதிக மதிப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் ரூ.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக 18 சதவீத ஜிஎஸ்டி தொகை வழங்கியதில் ரூ.26.97 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்தை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட முன்பணத் தொகைக்கு உரிய வட்டியை வசூலிக்காததால் மாநகராட்சிக்கு ரூ.47.92 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

