தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் தேவா சில நாட்களுக்கு முன்பு காலமானார். இதனை தொடர்ந்து தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த கிருஷ்ணராஜ், தனது குரல் திறமையால் பல்வேறு பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அஜித் குமார் மற்றும் தேவயானி நடித்த ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் கிருஷ்ணராஜின் குரலைப் பலருக்கும் அறிமுகப்படுத்தியது.
பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” என்ற பாடல் ரசிகர்களிடையே பிரபலமானது. இந்தப் பாடலுக்காக கிருஷ்ணராஜுக்கு 1997-ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.
2000-களுக்குப் பின் பருத்திவீரனில், ’அய்யயோ’ கழுகு திரைப்படத்தில், ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார்.
தேவா இசையமைத்த அதிகாலை சுபவேளை திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தேவா மறைந்து சில நாள்களிலேயே அவரது ஆஸ்தான பாடகரும் மறைந்தது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

