AI மீது அதிக நம்பிக்கை வைத்தால் என்ன ஆகும்? ஸ்ரீதர் வேம்பு முக்கிய எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு கருவிகள் மென்பொருள் உருவாக்கத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொறியாளர்கள் தங்களது அடிப்படை தொழில்நுட்பப் புரிதலை இழக்கும் அபாயம் இருப்பதாக சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை தெரிவித்துள்ளார்.

மென்பொருள் உருவாக்கத்தில் தற்போது AI கருவிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குறியீடு எழுதுவது மட்டுமின்றி, சோதனைகள், தயாரிப்பு ஆவணங்கள் என பல்வேறு பணிகளிலும் AI பயன்படுத்தப்படுகிறது. இதனால் வேலை விரைவாக முடியும். ஆனால், அவற்றைச் சரிபார்ப்பதற்கு மனித அறிவு முக்கியம்.

எக்ஸ் தளத்தில் ஒரு மென்பொருள் பொறியாளர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது : தான் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும் அங்கு பல பணிகளை ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் ‘கிளாட்’ கருவி உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். இதனால், மென்பொருளின் உள்ளடக்கத்தையும் செயல்பாட்டையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைந்து வருவதாகவும் அந்தப் பதிவில் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு, அந்த நிலை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். தனது நிறுவனத்தில் உள்ள பொறியாளர்களும் AI-ஐ பயன்படுத்த வேண்டும் என்று தான் கூறுவதாகவும், ஆனால் தங்களது புரிதலை AI-யிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

AI உருவாக்கும் குறியீட்டை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறியாளர்கள் புரிந்துகொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.

AI-ஐ அதிகம் நம்புவது மனிதனின் மூளைக்கு ஆபத்தா? ஆய்வுகள் சொல்வது என்ன?

ChatGPT, Google Gemini உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல்களைத் தேடுவது முதல் கட்டுரைகள் எழுதுவது வரை பல வேலைகளுக்கு AI பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அவை மனிதர்களின் சிந்தனை திறன் மற்றும் நினைவாற்றலில் அழிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. AI-ஐ அதிகமாக பயன்படுத்துவது மனிதர்களின் சிந்தனை திறனை பாதிக்கக்கூடும் என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், 18 முதல் 39 வயதுக்குட்பட்ட 54 பேரின் மூளை செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், AI உதவியுடன் எழுதுபவர்களின் மூளை செயல்பாடு குறைவாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது. AI-யை தொடர்ந்து பயன்படுத்தியவர்கள் தாங்கள் எழுதிய தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிரமங்களை சந்தித்ததாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, இது அதிகரித்தால் சுயமாக சுயமாக சிந்திப்பது மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்ற திறன்கள் பாதிக்கப்படக்கூடும். ஆய்வுகள் AI பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என வலியுறுத்துகின்றன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial