தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தமிழக போக்குவரத்து ஆணையரகம் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ந்தேதி ஆயுத பூஜை மற்றும் நவம்பர் 8-ந்தேதி தீபாவளி ஆகிய பண்டிகைகள் வருகின்றன. இதையொட்டி ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த காலத்தில் பயணிகளிடம் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சுமைகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அதிகாரிகள் முன்கூட்டியே கண்காணிப்பை தீவிரப்படுத்துகின்றனர். விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்ளிட்ட 3 பேர் இடம்பெறுவார்கள். சோதனையின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்ப உரிய அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

