உத்தரப் பிரதேச மாநிலத்தில், பள்ளியில் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக முதலில் ஒரு மாணவர் இறங்கியுள்ளார்.
அந்த மாணவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். மொத்தம் ஐந்து மாணவர்கள் தொட்டிக்குள் சென்ற நிலையில், அவர்களும் வெளியே வரவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை வெளியே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஐந்தாவது மாணவரான ருத்ர விதேஷ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது. தொட்டிக்குள் இருந்த தண்ணீர் அல்லது நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

