ஸ்பெயின் நாட்டில் உள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்து அந்த நாட்டின் பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார். மேலும், நவம்பர் 29-ம் தேதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
ஸ்பெயினில் கடந்த சில ஆண்டுகளாக வீட்டு விலை மற்றும் வாடகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாட்ரிட், பார்சிலோனா போன்ற நகரங்களில் குறைந்த விலையில் வீடு கிடைப்பது கடினமாகியுள்ளது. ஸ்பெயினில் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப புதிய வீடுகள் கட்டப்படவில்லை என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இந்த சூழலில், வாடகை கட்டுப்பாடு உள்ளிட்ட சில நடவடிக்கைகளை கொண்ட அவசர சட்டங்களை பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. ஆனால் அந்த நடவடிக்கைகளுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
வலதுசாரி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தன. இதன் பின்னர் பிரதமர் சான்செஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்து நவம்பர் 29-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
ஸ்பெயினில் அடுத்த பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டியிருந்த நிலையில், சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு இது முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது.

