அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீர் மின்தடை: அரசையும் மின்வாரியத்தையும் சாடும் எதிர்க்கட்சிகள்!

மதுரையில் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்றபோதே மேடையில் திடீரென மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்வெட்டை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அமைச்சரின் கண்முன்னே மின்வெட்டு

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் இருக்கும்போதே ஏற்பட்ட இந்த மின்வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின் இணைப்பை மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப இடைவெளி காரணமாக மட்டுமே சுமார் 5 வினாடிகள் மின்தடை ஏற்பட்டது” என்று குறிப்பிட்டார்.

“பல்பே பியூஸ் ஆகிடுச்சு” – செந்தில் பாலாஜி நக்கல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சர் இருக்கும் விழாவிலேயே மின்சாரம் இல்லை. மின்சாரம் போனதை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது. விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது என அமைச்சர் சொல்கிறார்.

மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை எனக் கூறப்படுகிறது. ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள்” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சாமானிய மக்களின் கதி என்ன?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. “அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை, ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் போல” எனத் தாக்கிப் பேசியுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial