தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்களில் கனமழை?
கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
பிற மாவட்டங்களிலும் மிதமான மழை
சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் 7ம் தேதி வரை
ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் லேசான மழை தொடரலாம்.
ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
