மதுரையில் தொடங்கிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: யார் யாருக்கு கிடைக்கும்?

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு நடைபெற்ற விழாவில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர், பிரசவ வார்டுக்கு சென்ற அவர், அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு வழங்க திட்டம்

2026 ஜூன் 22-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.28 லட்சம் மோதிரங்கள் தகுதியான குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க மோதிரம் தனித்துவமான வரிசை எண் மற்றும் பாதுகாப்பான பேக்கேஜிங்குடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial