பாட்னாவிலிருந்து லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் நடுவானில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, பாட்னாவிலிருந்து லக்னோ நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது.
மின்னல் தாக்கியபோது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது விமானிகளுக்கு உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்னல் தாக்கிய தகவலை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் பயணிகள் அனைவரும் வழக்கம்போல் விமானத்திலிருந்து வெளியேறினர். இந்த விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானத்தின் சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அதன் பின்னர் உரிய அனுமதி கிடைத்த பிறகே அந்த விமானம் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

