தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பு அரிசி விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் அளவு குறைந்திருப்பது விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இதே நிலைமை நீடித்தால் தீபாவளிக்கு முன்பு சில வகை அரிசியின் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும் என அரிசி ஆலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு தேவையான அரிசிகள், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த மாநிலங்களில் நெல் உற்பத்தி மற்றும் வரத்து பாதிக்கப்படும்போது அதன் தாக்கம் தமிழக சந்தையிலும் எதிரொலிக்கும்.
கடந்த சில மாதங்களாக நெல் வரத்து குறைந்ததால் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950 ஆகவும், ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பொன்னி ரூ.2,300 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேபோல், ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி தற்போது ரூ.1,200 ஆகவும், ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசி ரூ.1,800 ஆகவும் உயர்ந்துள்ளது. 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய விலை உயர்வு தொடர்ந்தால், தீபாவளி பண்டிகைக்கு முன்பு சில வகை அரிசியின் சில்லறை விலை கிலோ ரூ.100 வரை செல்லக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். அரிசி விலை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டுமெனில், தமிழகத்திற்கு தேவையான அளவு நெல் வரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

