கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூபர் வசித்து வரும் வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்மநபர்கள் 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டன் பகுதியில் வினோத்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா பிரபல யூடியூபராக இருந்து வருகிறார். இவர் தன்னிடம் கட்டுக்கட்டாக இருக்கும் பணம், தங்க நகைகள், வைர நகைகளை காண்பித்து வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு துணிக்கடைக்குச் சென்றுள்ளனர். பின்னர் இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு சேதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் 118 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் கதவு மற்றும் பீரோவில் கொள்ளையர்கள் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

