ட்ரோன்கள் பறக்க தடை : திருப்பரங்குன்றம் மலை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நவம்பர் 24-ம் தேதி தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளை ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 23 முதல் நவம்பர் 24, 2026 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே, குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் தனிநபர்கள் மற்றும் பிற அமைப்புகள் அனுமதியின்றி ட்ரோன்களைப் பயன்படுத்தக் கூடாது.

அத்தியாவசிய காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவை மீறி ட்ரோன்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HTML tutorial