சென்னை வாகன ஓட்டிகளே கவனம்! இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்!

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக சென்னை வருவதையொட்டி, சென்னையில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், போரூர், அடையாறு, அண்ணா சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளில் செல்லும் வாகனங்களுக்குப் பாதை மாற்றம் செய்யப்பட உள்ளது.

நவம்பர் 21: பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

சனிக்கிழமையான இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும். அதன்படி, தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு குன்றத்தூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

பல்லாவரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பன்னாட்டு விமான நிலைய சந்திப்பில் உள்ள ஹோட்டல் ஏர்வே பகுதியில் திருப்பிவிடப்பட்டு தாம்பரம் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும். போரூரிலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாராவில் திருப்பி விடப்பட்டு வடபழனி வழியாகச் செல்லலாம்.

அசோக் பில்லர் பகுதியிலிருந்து வருபவர்கள் சிபெட் (CIPET) சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு கிண்டி தொழிற்பேட்டை நோக்கிச் செல்லலாம். அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் திருப்பிவிடப்படும். அடையாறு பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கு எல்.பி. சாலை சந்திப்பில் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியிலும், ஈசிஆர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பிலும் திருப்பிவிடப்படும்.

நவம்பர் 22: காலை 8 மணி முதல் 10.30 மணி வரை

ஞாயிற்றுக்கிழமையான நாளை (நவம்பர் 22) காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அடையாறு மற்றும் பாரிஸ் கார்னர் இடையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் நோக்கி வரும் வாகனங்கள்: வாகனங்கள் கிரீன்வேஸ் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, டி.டி.கே சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, ஆர்.கே. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் சென்று தங்களது இலக்கை அடையலாம்.

மறுபுறம், பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial