ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி JK Tyres நிறுவனத்தை மூட வேண்டும் என்று தவெக எம்.எல்.ஏ தாஹிரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிறுவனத்தின் பெயரை தவறாக படித்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கேள்வி நேரத்தில் பேசிய ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, தனது தொகுதியில் டயர்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அவர் அந்த நிறுவனத்தை JK Tyres எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் JK Tyres நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்படுகிறதா என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்த சர்ச்சை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தாஹிராவிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், நிறுவனத்தின் பெயரை குறிப்பிடுவதில் தவறு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, AK Tyres என்று சொல்வதற்கு பதிலாக தவறுதலாக JK Tyres என்று கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

