தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சரவணன், ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நள்ளிரவில் தூங்கிய மருத்துவரை எழுப்பி கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ கு.சரவணன் நேற்று முன்தினம் நள்ளிரவில், ஏரலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சென்றுள்ளார். அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த மருத்துவரை எழுப்பி சிகிச்சை தொடர்பான கேள்விகளை கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து, அரசு மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “நோயாளிகள் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அனுமதி உள்ளது. அரசின் நடைமுறையை அறியாமல் எம்எல்ஏ வீண்பழி சுமத்துகிறார்” என்றனர். எம்எல்ஏ கு.சரவணனின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் விடுத்த கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்குக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்எல்ஏ சரவணன், நோயாளிகள் இல்லாத போது ஓய்வில் இருக்கும் மருத்துவரை எழுப்பி தவெக எம்எல்ஏ சரவணன் துன்புறுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் ஓய்வு எடுக்க தனி அறை இருக்கிறது. நோயாளிகள் இருந்து மருத்துவர்கள் தூங்கினால்தான் தவறு. நோயாளிகள் இல்லாமல் மருத்துவர் சென்று ஓய்வு எடுக்கலாம். அரசாங்க நடைமுறையை தெரியாமல் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்று மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தியுள்ளார் என கண்டனம் தெரிவித்துள்ளது.

