அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில், கடந்த 2009 நவம்பர் 5-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அப்போது அமெரிக்க ராணுவத்தில் மனநல மருத்துவராகப் பணியாற்றிய நிடால் மாலிக் ஹசன் என்பவர் மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருந்த ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில், 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹசன் காயமடைந்து, உடலின் கீழ்ப்பகுதியில் செயலிழப்பு ஏற்பட்டது. அமெரிக்க ராணுவத் தளத்தில் நடைபெற்ற மிகக் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்த வழக்கில் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 2013-ஆம் ஆண்டு ஹசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க சிறையில் கைதியாக இருந்து வரும் மருத்துவருக்கு வரும் டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஃபோர்ட் ஹூடில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், இந்த மரண தண்டனை பொது வெளியில் நிறைவேற்றப்பட்டு, நேரலையில் ஒளிபரப்பப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் நேரலையாக ஒளிபரப்புவதற்கான தெளிவான நடைமுறைகள் உள்ளனவா, ஒளிபரப்பு எங்கு நடைபெறும், எந்தத் தளத்தில் காண முடியும் என்பன போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை.

