வஜ்ராசனம் என்பது யோகாவில் செய்யப்படும் முழங்காலிட்டு அமரும் ஆசனமாகும். இதில் இரண்டு கால்களையும் மடித்து, குதிகால்களின் மீது இடுப்பை வைத்து அமர வேண்டும். முதுகு, கழுத்து மற்றும் தலையை ஒரே நேர்கோட்டில் வைத்துக்கொண்டு, கைகளைத் தொடைகளின் மீது வைத்து இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
வஜ்ராசனம் செய்வது எப்படி?
வஜ்ராசனம் செய்ய முதலில் தரை விரிப்பில் உட்கார்ந்து மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். முதுகு மற்றும் கழுத்தை நேராக வைத்துக்கொள்ளவும். தோள்களை இறுக்கமாக வைத்திருக்காமல் தளர்த்தவும்.
இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைக்கவும். கண்களை மூடி, இயல்பாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். தொடக்கத்தில் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை முயற்சி செய்யலாம்.
இதையும் படிங்க : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சுகாசனம்! செய்வது எப்படி?
வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
வஜ்ராசனம் வயிறு மற்றும் குடல்களுக்கு சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு உப்புசம் மற்றும் வாயு போன்ற பொதுவான செரிமானப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வஜ்ராசனம் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுக்குப் பிறகு இந்த நிலையில் அமர்வது, வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைக்கவும் உதவுகிறது.

