நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில், அவரது 50-வது திரைப்படமாக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தில், விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், சிங்கம்புலி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.110 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியது. சீனாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.91.65 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘மகாராஜா 2’ படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இது குறித்து ‘பத்தா’ பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது : நித்திலன் ஒரு சிறந்த இயக்குநர். சமீபத்தில் அவர் என்னிடம் ‘மகாராஜா 2’ கதையைச் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்தது. ‘மகாராஜா’ இவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கவில்லை. அதன் ஹாலிவுட் ரீமேக்கில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் வாங்கித் தாருங்கள்; சம்பளம் இல்லாமல் நடிக்கிறேன். நான் நடித்த படம் ஹாலிவுட்டுக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என பேசியுள்ளார்.
இதன் மூலம் ‘மகாராஜா 2’ வரப்போவது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

