ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள சிறிய உலோகப் பொத்தான்கள் எதற்காக? பலருக்கும் தெரியாத உண்மை!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் சிறிய உலோகப் பொத்தான்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அவை வெறும் அழகுக்காகப் வைக்கப்பட்டுள்ளவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த சிறிய உலோகப் பகுதிகளுக்குப் பின்னால் ஒரு முக்கியமான தொழில்நுட்பக் காரணமும், 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறும் இருக்கின்றன.

ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள இந்த உலோகப் பகுதிகள் ரிவெட்டுகள் (Rivets) என்று அழைக்கப்படுகின்றன. பாக்கெட்டுகளின் மூலைகளிலும் தையல் பகுதிகளிலும் துணி கிழிவதைத் தடுத்து, பேண்ட் நீண்ட காலம் உழைக்க இது உதவுகிறது.

ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் ரிவெட்டுகள் ஏன் பொருத்தப்படுகின்றன?

ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் பர்ஸ், சாவி, கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை வைக்கும்போது, பாக்கெட்டின் மூலைகளிலும் தையல் பகுதிகளிலும் அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் போது இந்த அழுத்தத்தால் தையல் நூல்கள் பலவீனமடைந்து துணிகள் கிழிய தொடங்கும். இதைத் தவிர்ப்பதற்காக பாக்கெட்டின் முக்கியமான இடங்களில் உலோக ரிவெட்டுகள் பொருத்தப்படுகின்றன.

ஜீன்ஸ் ரிவெட்டுகளைக் கண்டுபிடித்தவர் யார்?

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நெவாடா மாநிலம் ரெனோ நகரில் தையல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜேக்கப் டேவிஸ் என்பவர், தொழிலாளர்களின் பேண்ட் அடிக்கடி கிழிவதை தடுக்க முயற்சி எடுத்தார். அப்போது, பாக்கெட்டுகளின் அழுத்தம் அதிகமாக ஏற்படும் இடங்களில் உலோக ரிவெட்டுகளைப் பொருத்தும் முறையை ஜேக்கப் டேவிஸ் உருவாக்கினார்.

இருவரும் இணைந்து இந்த முறைக்கான அமெரிக்கக் காப்புரிமையை 1873ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி பெற்றனர். இதுவே ரிவெட்டுகள் பொருத்தப்பட்ட ஜீன்ஸ் கால்சட்டையின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீன்ஸ்

ஆரம்பத்தில் ஜீன்ஸ் என்பது நாகரிக ஆடையாக அல்லாமல், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் என கடினமான வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களுக்கான நீடித்த உழைப்புடைய ஆடையாகவே உருவாக்கப்பட்டது. பின்னர் ஜீன்ஸ் உலகம் முழுவதும் பிரபலமான ஆடையாக மாறியது. தற்போது வரை, பாக்கெட் மூலைகளில் உள்ள ரிவெட்டுகள் பாரம்பரிய ஜீன்ஸின் அடையாளமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதையும் படிங்க : எஸ்கலேட்டர் ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்காக? பலருக்கும் தெரியாத உண்மை

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial