அசாம் மாநிலம் நுமலிகர் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று நடமாடுவதை உள்ளூர் மக்கள் கவனித்தனர். அப்போது அந்த யானையின் கழுத்தைச் சுற்றி பெரிய டிராக்டர் டயர் ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்தது.
டயர் இறுக்கமாக கழுத்தில் மாட்டியிருந்த நிலையில், யானை தொடர்ந்து தேயிலைத் தோட்டத்திற்குள் சுற்றித்திரிந்துள்ளது. இதையடுத்து, யானையை உடனடியாக கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்களா என்பது குறித்த முழுமையான தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட மனிதர்கள் பயன்படுத்தும் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கிடக்கும் குப்பைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

