ஆந்திராவில் சிறையில் உள்ள தனது காதலனை ஜாமீனில் எடுக்க போதைப்பொருள் கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவின் படமட்டா பகுதியைச் சேர்ந்த நாக சவுமியா. இவருடைய காதலன் காசிவர்தன், சுமார் மூன்று மாதங்களுக்கு போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் எடுக்க முடிவு செய்த நாக சவுமியா பணத்திற்காக ரயிலில் போதை பொருள் கடத்தியுள்ளார்.
போதைப்பொருள் ரயிலில் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ரயில்வே போலீசார் விஜயவாடா ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் நாக சவுமியாவைச் சோதனை செய்ததில், அவரது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயவாடாவின் கிருஷ்ணலங்கா பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவர், பெங்களூருவில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்தால் ரூ.50 ஆயிரம் கமிஷன் வழங்குவதாக நாக சவுமியாவிடம் கூறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

