உலகம் பல்வேறு போர்கள், அரசியல் பிளவுகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஈரான், காசா, உக்ரைன், சூடான், காங்கோ மற்றும் மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் நீடிக்கும் மோதல்கள், உலக நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிளவுகள், உலக வெப்பமயமாதல், பொருளாதார அழுத்தம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இது குறித்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், AI தொடர்பான ஆபத்துகள் ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை என்பதால், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார். AI வளர்ச்சியை உருவாக்கும் நிறுவனங்களிலேயே சிலர் அதன் ஆபத்துகள் குறித்த கவலைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். AI பாதுகாப்பில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு உயர்மட்டக் கூட்டத்தில் சில முக்கிய தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவில்லை. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் பங்கேற்காமல் தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

