காணாமல் போன முதியவர்: ChatGPT மூலம் குடும்பத்தை கண்டுபிடித்த இளைஞர்

பஞ்சாப் மாநிலத்தில் காணாமல் போன முதியவர் ஒருவரை ChatGPT உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் சாமன் லால். இவர் பகடந்த செப்டம்பர் 11-ம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்றுள்ளார்.திரும்பி வரும்போது, தவறுதலாக, பீகார் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் மூலம் அவர் கயாவுக்குச் சென்றடைந்தார். இது அவரது சொந்த ஊரிலிருந்து 1,200 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ளது.

சாமன் லாலுக்கு நினைவாற்றல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், கயாவுக்குச் சென்ற பின்னர் தனது வீட்டின் முழு முகவரியை அவரால் தெரிவிக்க முடியவில்லை.

கயா ரயில் நிலையம் அருகே சாமன் லால் தனியாகவும், பசியுடனும், கவலையுடனும் இருப்பதை நீரஜ் என்பவர் கவனித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, தனது கிராமத்தின் பெயர் ஃபதேகர் குஜ்ரான் என்பதை மட்டும் சாமன் லால் கூறியுள்ளார். இதையடுத்து நீரஜ் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கியதுடன், குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் நான்கு நாட்கள் சாமன் லால் நீரஜின் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

ஃபதேகர் குஜ்ரான் என்ற பெயரை பல்வேறு முறைகளில் பயன்படுத்தி, நீரஜ் இணையத்தில் தேடினார். அதோடு ChatGPT-யின் உதவியையும் பயன்படுத்தினார். சுமார் மூன்று நாட்கள் மேற்கொண்ட தேடலுக்குப் பிறகு, லூதியானா மாவட்டத்தில் மச்சிவாரா சாஹிப் அருகே ஃபதேகர் குஜ்ரான் என்ற கிராமம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து சாமன் லாலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பேரன் சுக்செயின் சிங் மச்சிவாராவுக்கு வந்து, சாமன் லால் தனது தாத்தா என்பதை உறுதி செய்தார். பின்னர் சாமன் லாலின் குடும்பத்தினர் நீரஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கயாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வரும் நீரஜ், ரயில் நிலையம் அருகே தனியாகவும் கவலையுடனும் இருந்த முதியவரை பார்த்ததால் அவருக்கு உதவியதாக தெரிவித்துள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial