மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள், சாலைகள், பாலங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் செப்டம்பர் 24 முதல் 27-ம் தேதி வரை பெய்த தொடர் கனமழையின் தாக்கம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, கனமழை காரணமாக நாடுமுழுவதும், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நேபாளத்தின் பக்லுங் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் மத்திய நேபாளத்தில் உள்ள நாராயணி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3,000 பேர் ஏற்கெனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக சில இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கேள்வியா கேக்குற.., இளைஞரின் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial