இந்திய திரையுலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றான 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத்தின் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். விருதுகளுக்கான பட்டியல் கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
அமரன்
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘அமரன்’ படத்தின் பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் சிறந்த இசை இயக்குநர் விருது வழங்கப்பட்டுள்ளது. படத்துக்கான படத்தொகுப்புப் பிரிவிலும் ஆர். கலைவண்ணன் விருது பெற்றுள்ளார்.
மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படத்துக்கான சண்டைக்காட்சிகளுக்காக அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை பெற்றுள்ளார். இதே திரைப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ‘ராயன்’ சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ தேசிய, சமூக மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ‘மகாராஜா 2’ கதை தயார்! நடிகர் விஜய் சேதுபதி சொன்ன முக்கிய அப்டேட்
பிற முக்கிய விருதுகள்
‘கல்கி 2898 AD’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்காக சுகுமார் சிறந்த திரைக்கதை விருதை பெற்றுள்ளார். ‘ஸ்த்ரீ 2’ படத்தின் நடன அமைப்புக்காக விஜய் கங்குலியும் விருது பெற்றுள்ளார்.

