மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை போலீஸ் துறையில் ரூ.6.41 கோடி சம்பள மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இல்லாத ஊழியர்களின் பெயரை பதிவு செய்து, அவர்களுக்கான சம்பளத்தை வங்கி கணக்குகள் மூலம் முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
10 போலி ஊழியர்கள் பெயரில் சம்பளம்
விசாரணையில், மும்பை போலீஸ் துறையில் பணியாற்றாத 10 நபர்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் ஊழியர்களாக சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் பல மாதங்கள் நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐந்து பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு நிர்வாக ஊழியர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கப்பட்டுள்ள அவர்கள், அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் மும்பை மாநகர எல்லையை விட்டு வெளியே செல்லக் கூடாது. வேறு எந்த தனியார் பணியிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தீவிர விசாரணை
போலி ஊழியர்களாக பதிவு செய்யப்பட்ட 10 பேரின் உண்மையான அடையாளம் என்ன, அவர்களது பெயரில் திறக்கப்பட்ட வங்கி கணக்குகளை யார் கட்டுப்படுத்தினர், சம்பளத் தொகை யாரிடம் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களின் சம்பள மேலாண்மை அமைப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என்பதை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
