பீகார் மாநில அரசு மருத்துவமனையில் கால் எலும்பு முறிந்த நோயாளிக்கு பிளாஸ்டர் போடாமல், அட்டைப் பெட்டியை பயன்படுத்தி முதலுதவி அளிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார், ஆகஸ்ட் 3-ஆம் தேதி விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் நோயாளிக்கு உடனடி முதலுதவி அளிக்கும் போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டருக்கு பதிலாக மருந்துப் பொருட்கள் வைக்கப்படும் அட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பெகுசராய் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் அபினவ் பிரியதர்ஷி, இது நிரந்தர சிகிச்சை அல்ல என்றும், அவசரகால முதலுதவி நடவடிக்கையாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
