மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.234.50 கோடி மதிப்பிலான 130 புதிய தாழ்தள ஏ.சி. மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டு வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 முக்கிய பணிமனைகள் மூலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படவுள்ள ரூ.234.50 கோடி மதிப்பிலான 130 புதிய ஏ.சி. மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
