ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் வழக்கம்போல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, பல மாணவர்களுக்குக் கடுமையான தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது.
இதில் 27 மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாகப் பள்ளிக்கு சிறப்பு மருத்துவக் குழு அனுப்பப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநில அமைச்சர் மதன் திலாவர் நேரில் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களைப் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “குழந்தைகள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
