வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. திருவிழாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து ஆகஸ்ட் 29 அன்று வேளாங்கண்ணியில் இருந்து சென்னை நோக்கி மேலும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் நிறைவு நிகழ்வான கொடி இறக்கம் செப்டம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்விலும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், செப்டம்பர் 8 அன்று சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியில் இருந்து சென்னை செல்வதற்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
