இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சர்க்கரை விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் சர்க்கரையின் விலை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சில ஆன்லைன் டெலிவரி தளங்களிலும், நேரடி சில்லறை கடைகளிலும் வாங்கக்கூடிய சர்க்கரையின் அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒரே ஆர்டரில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரை பாக்கெட்டுகளை வாங்க முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறை இல்லை. ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை நிலவரத்துக்கு ஏற்ப வரம்புகள் மாறுபடுகின்றன.
பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களின் சில கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் 2 முதல் 3 கிலோ வரை சர்க்கரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விலை உயர்ந்துள்ள நேரத்தில் சர்க்கரை வாங்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் சர்க்கரை தேவைப்படும் குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
