ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சர்வதேச அளவில் பிரம்மோஸ் ஏவுகணை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணையை வாங்க பல்வேறு உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன?
கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ம் தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் தீவிரமடைந்தது. மே 7 முதல் மே 10 வரை ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றது. பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சர்வதேச அளவில் பிரம்மோஸ் ஏவுகணை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பிரம்மோஸ் ஏவுகணையின் சிறப்புகள் என்ன?
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆயுதங்களில் பிரம்மோஸ் ஏவுகணையும் ஒன்று. 3 ஆயிரம் கிலோ எடைக்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
பிரம்மோஸ் ஏவுகணையை தரைப்படை, கடற்படை, விமானப்படை என வெவ்வேறு ராணுவத் தளங்களில் இருந்து ஏவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணையின் திறன்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் பிரம்மோஸ்-என்ஜி உருவாக்கப்படுகிறது. இது தற்போதைய ஏவுகணையைவிடச் சிறியதாகவும் எடை குறைந்ததாகவும் வடிவமைக்கப்படுகிறது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பிரம்மோஸ்-என்ஜி ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இதன் முன்மாதிரி 2027 அல்லது 2028-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் விருப்பம்
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு சர்வதேச அளவில் பிரம்மோஸ் ஏவுகணை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணையை வாங்க பல்வேறு உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் இருந்து முதல் நாடாக பிலிப்பைன்ஸ், பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி உள்ளது. அடுத்ததாக வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதையும் படிங்க : தமிழகத்தில் 2027ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

