அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இஇதுவரை 557 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு உதவுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் மாநிலம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 432 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் 557 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒன்பது காவல் நிலைய எல்லைகளில் 63 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபூமி மாவட்டத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சிறையில் கட்டில், மெத்தை வசதி – அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

