பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோ ஃபேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் சக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த அதிகாரப்பூர்வ வீடியோ, ஃபேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மெட்டா வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ நீக்கபட்டது என்றும், வேறு எந்தவிதமான நடவடிக்கையோ அல்லது அரசு உத்தரவின் அடிப்படையிலோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தவறாக நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்காக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு செய்யத் தவறினால், நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
