HomeSpecial Airtcleவேகவேகமாக தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகள்., காரணம் இதுதான்..!

வேகவேகமாக தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகள்., காரணம் இதுதான்..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் குறைந்து, விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என டிரம்ப் தெரிவித்ததை அடுத்து, உலக முதலீட்டு சந்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கம் நோக்கி மாற்றத் தொடங்கியுள்ளனர்.

உலக நிதி சந்தையில் தங்கம் மீண்டும் “பாதுகாப்பான முதலீடு” என்ற நிலையை வலுப்படுத்தி வருகிறது. டாலர் ஆதிக்கத்திற்கு மாற்றாக பல நாடுகள் தங்க கையிருப்பை அதிகரித்து வருவது தற்போது முக்கிய பொருளாதார விவாதமாக மாறியுள்ளது.

நிதி நிறுவனம் ஜெஃப்ரீஸ் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, உலகின் பல மத்திய வங்கிகள் தற்போது அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை விட தங்கத்தை அதிகமாக வாங்கி குவித்து வருகின்றன. இதனால் உலக நிதி அமைப்பில் பெரிய மாற்றம் நிகழும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முன்பு மத்திய வங்கிகள் தங்களின் தங்க கையிருப்பு மற்றும் பண அச்சிடும் அளவை வெளிப்படையாக அறிவித்து வந்த நிலையில், தற்போது அந்த வெளிப்படைத்தன்மை குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக டாலர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நிபுணர்கள் கூறுகையில், அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் ஆண்டுதோறும் செலுத்தப்படும் மிகப்பெரிய வட்டி தொகை உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக டாலரின் மதிப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் பின்னணியில், பல நாடுகள் தங்கள் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தங்கத்தை அதிக அளவில் சேமித்து வருகின்றன. தங்கம் எந்த நாட்டின் கடன் அல்லது கொள்கை மாற்றத்திற்கும் உட்படாததால், இது “நிலையான மதிப்பு” கொண்ட சொத்தாக பார்க்கப்படுகிறது.

உலக தங்க கையிருப்பு தரவுகளின்படி, அமெரிக்கா 8,134 டன் தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ரஷ்யா மற்றும் சீனா ஆகியவையும் 2,300 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. இந்தியா சுமார் 880 டன் தங்கத்துடன் உலக அளவில் 8-வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்க சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments