தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த சில மாதங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சில வகை அரிசிகளின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 26 கிலோ பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பாஸ்மதி அரிசியின் விலையும் 15 முதல் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரிசி வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிசி விலை எவ்வளவு?
சென்னையில், 26 கிலோ பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.1,400 ஆக இருந்தது. ஒரு கிலோ பொன்னி அரிசி சுமார் ரூ.69 ஆக உள்ளது.
ரூ.850 ஆக இருந்த 26 கிலோ இட்லி அரிசி ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,200 ஆக இருந்ததாக 26 கிலோ சன்னரக அரிசி தற்போது ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசியின் விலை தற்போது ரூ.1,450 முதல் ரூ.1,550 வரை உள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் டெங்கு வேகம் அதிகரிப்பு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு உறுதி
பாசுமதி, சீரகச்சம்பா விலையும் உயர்வு
சென்னையில் ரூ.1,450 முதல் ரூ.2,500 வரை விற்பனை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4,900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி தற்போது ரூ.5,400 ஆக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு பருவமழை பற்றாக்குறை, நெல் விளைச்சல் பாதிப்பு ஒரு காரணமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மொத்த அரிசி தேவையில் ஒரு பகுதி பிற மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. மீதமுள்ள தேவைக்காக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி வருவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்னர்.
இதனிடையே, கடந்த ஆண்டு நெல் அறுவடை எதிர்பார்த்ததைவிட வேகமாக முடிந்ததால், அக்டோபர் மாத புதிய வரத்து தொடங்குவதற்கு முன்பே அரிசி கையிருப்பு குறைந்ததாக அரிசி வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் அரிசிக்கான தேவை அதிகரித்திருப்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா?
விலை உயர்ந்துள்ள நிலையில், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் டி.துளசிங்கம் தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நெல் வரத்து சந்தையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே அரிசி விலையில் அடுத்த மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

