தமிழகத்தில் டெங்கு வேகம் அதிகரிப்பு: ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 1 முதல் செப்டம்பர் 18, 2026 வரை மாநிலத்தில் 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 18) ஒரு நாள் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் மரணம்

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவமும் பீதியை கிளப்பியது. ஆரம்பத்தில் இந்த மரணம் டெங்கு காரணமாக ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் இறந்த மாணவருக்கு ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகவும் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு காணப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும், இதற்காக மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கொசு ஒழிப்பு பணிகளுக்காக போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டெங்கு காய்ச்சல்: இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை செல்லுங்கள்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial