தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். (SIR) தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. வாக்காளர் பெயர் நீக்கம், புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தேர்தல் தரவுகளின் பாதுகாப்பு குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களது ஆலோசனையை ஏற்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று இந்த விவகாரத்தை குறிப்பிட்டு அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்
தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் அல்லது ஒருதலைப்பட்சமாக அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என அறிவிக்கக் கோரியும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : கேள்வியா கேக்குற.., இளைஞரின் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்

