தமிழகத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 4.68 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. நகர்ப்புறங்களில் சில பகுதிகளில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஆனால் கிராமப்புறங்களில் இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் போதிய அளவில் இல்லாததால் அங்கு நாய்க்கடி சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்
சேலம் – 28,166 பேர் பாதிப்பு; 3 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலி – 23,095 பேர் பாதிப்பு
கடலூர் – 22,113 பேர் பாதிப்பு; 3 பேர் உயிரிழப்பு
சென்னை – 9,229 பேர் பாதிப்பு; 3 பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டை விட குறைவு
கடந்த ஆண்டில் 6.26 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 34 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. இருப்பினும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் நாய்க்கடிக்கு ஆளாகும் நிலை தொடர்வதால், தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
