HomeTamilnaduஇனி மதுபானங்களை ஆன்லைனில் புக் செய்யலாம்… தமிழ்நாட்டில் புதிய வசதி

இனி மதுபானங்களை ஆன்லைனில் புக் செய்யலாம்… தமிழ்நாட்டில் புதிய வசதி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை முறையில் முக்கியமான டிஜிட்டல் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபான வகைகள் இருப்பில் உள்ளன என்பதை ஆன்லைனில் பார்த்து, விரும்பியவற்றை தேர்வு செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக புதிய ஆன்லைன் தளம் வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் இருப்பு விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

டோர் டெலிவரி கிடையாது

இந்த புதிய வசதி மதுபானங்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கும் டோர் டெலிவரி சேவை அல்ல. ஆன்லைனில் மதுபானத்தை தேர்வு செய்து பணம் செலுத்திய பிறகு, வாடிக்கையாளர் தேர்வு செய்த டாஸ்மாக் கடைக்குச் சென்று அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனை முடிந்தவுடன் வாடிக்கையாளருக்கு QR Code வழங்கப்படும். அந்த QR Code-ஐ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்து, முன்பதிவு செய்த மதுபான பாட்டில்களை பெறலாம்.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே

தமிழ்நாட்டில் மதுபானம் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயதை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இந்த இணையதளத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, 21 வயது பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திய பிறகே வாடிக்கையாளர்கள் தளத்திற்குள் நுழைந்து சேவையை பயன்படுத்த முடியும்.

பயனர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து 5 கி.மீ. முதல் 25 கி.மீ. வரையிலான சுற்றளவில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை தேடலாம். கடையின் எண் அல்லது மாவட்டத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட கடையை கண்டறியும் வசதி வழங்கப்பட உள்ளது.

விலையை ஆன்லைனிலேயே பார்க்கலாம்

புதிய இணையதளத்தில் ஒவ்வொரு மதுபான வகையின் இருப்பு மட்டுமின்றி, அதன் MRP விலை மற்றும் சப்ளையர் விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பான புகார்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இணையதளம் செயல்பட உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments