மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 67,819 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தாராபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும்சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, ‘கூட்டணி அரசு’ என்கிற தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
‘விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும்’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குற்றவாளியின் மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்ப அமெரிக்கா முடிவு. என்ன காரணம்?

