தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்து வந்த நடிகர் விஜய், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து, தவெக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சியை விரிவுபடுத்தும் வகையில், மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் தவெக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதிய கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்ற மேடையில் தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், மேற்கு வங்கத்தில் அரசியல் மோதல்களை தவிர்த்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : மதுரையில் தொடங்கிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: யார் யாருக்கு கிடைக்கும்?

