சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், “என் மேஜையில் 3 துறைகளின் கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்பேன்’ என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் விஜய் தன்னுடைய மேசையில் சில கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறந்து பார்க்கும்படி தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என கூறினார். அந்த கோப்புகள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அவற்றை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
மேலும், “கோப்புகளை உடனடியாக பார்ப்பதற்கு என்ன தயக்கம்? ஜோதிடர் சொன்னால்தான் கோப்புகளை திறந்து பார்ப்பாரா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
“மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது”
திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில், நடவடிக்கை எடுப்போம் என்ற எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்களால் திமுக அச்சப்படாது என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவையா அல்லது பாடல் நிகழ்ச்சியா?
சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது ஆளுங்கட்சியினர் பாட்டு பாடுவது குறித்தும் உதயநிதி விமர்சனம் செய்தார். சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா அல்லது பாடல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அவையில் நிகழ்வுகள் நடைபெறுவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க : எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய கார்: தலைமைச் செயலகத்துக்கு வந்த 6 மாடல்கள்
சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் இடம் என்பதால், சினிமாவில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களைப் போன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
அவைக்குறிப்பில் நீக்கப்படும் பேச்சுகள்
சட்டப்பேரவையில் பேசப்படும் சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்படுவதாக உதயநிதி சுட்டிக்காட்டினார். சட்டப்பேரவை வரலாற்றிலேயே ஆளுங்கட்சி தரப்பினரின் பேச்சுகள் அதிக அளவில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாகவும் உதயநிதி பேசினார். சட்டப்பேரவை நிகழ்வுகளை முதல்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சியில்தான் என்று அவர் கூறினார்.
