ஏ.ஐ காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், 2030ல் ஏ.ஐ காரணமாக உலகம் அழியும் வாய்ப்பு பூஜ்ஜியம் சதவீதம் என்று என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். ஏ.ஐ வளர்ச்சியை வேகமாக தொடர வேண்டும் என்றும், அதே நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘2030ல் உலகம் அழியும்’ என்ற கணிப்புக்கு மறுப்பு
ஏ.ஐ மனித இனத்தை அழிக்கும் என்ற கருத்தை ஜென்சன் ஹுவாங் நிராகரித்துள்ளார். ஏ.ஐ காரணமாக 2030ல் உலகம் அழியும் வாய்ப்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற அச்சத்தை ஏற்படுத்தும் கணிப்புகள் தனக்கு புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : AI-ஐ அதிகம் நம்புவது மனிதனின் மூளைக்கு ஆபத்தா? ஆய்வுகள் சொல்வது என்ன?
ஏ.ஐ வளர்ச்சியை நிறுத்த வேண்டுமா?
ஏ.ஐ வளர்ச்சியின் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஜென்சன் ஹுவாங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஐ துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து வேகமாக நடைபெற வேண்டும். அதே நேரத்தில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
மிகவும் சக்திவாய்ந்த ஏ.ஐ அமைப்புகள் எதிர்காலத்தில் மனித கட்டுப்பாட்டை மீறக்கூடிய அபாயம் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய ஏ.ஐ அமைப்புகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் அளவுக்கு அவை இன்னும் வளரவில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

